வலையைத் தேடிய மீன்
அல்போன்ஸ்-திருச்சி
நற்செய்திகளில் வாழ்வின் குறிக்கோள்கள் விவரிக்கப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் அலைகளுக்கிடையே காணப்படும் ஓர் ஒழுங்கான ஒருங்கிணைந்த அமைப்பும் படிப்பவர்கள் எவரையும் ஆனந்தத்தில் அழவைக்கும்.
எளிய எழுத்துநடை, நிகழ்ச்சிகளின் ஒழுங்கான கோர்வை மற்றும் அதன் வெவ்வேறு அம்சங்களின் பொருத்தமான வார்த்தைகள் தான் விவிலியத்தின் சிறப்பு.
இயேசுவின் சிந்திப்பு
நற்செய்திகளில் இரண்டு நிகழ்ச்சிகள் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கின்றது. இரண்டு நிகழ்வில் பேதுருவும் இயேசுவும் ஒன்று இணைந்தே காணப்படுகின்றார்கள். கெனசரேத் கடலருகில் மற்றொன்று திபேரிய கடலருகில். முதல் நிகழ்ச்சியால் பேதுருவும் இயேசுவும் முதன்முதலாகவும், இரண்டாவது நிகழ்ச்சியில் இறுதியாகவும் சந்திக்கின்றனர். இரண்டு நிகழ்ச்சிகளையும் இணைக்கும் ஒரு சரடாக, அடிநாதமாகப் பேதுரு சுற்றி நிகழும். அங்கே வலையும் மீனும் இருக்கும், அங்கே பேதுரு என்ன மாற்றம் அடைகின்றார் என்பதைச் சுவாரசியமாக விவரிக்கிறது.
முதல் காட்சி
கெனசரேத் கடலருகே இயேசு பேதுரு நோக்கி ‘ஆழத்தில்’ கொண்டு போய் வலைகளைப் போடுங்கள் என்றார். பேதுரு எவ்வளவோ முயற்சி செய்தும் மீன்கள் அகப்படவில்லை என்று கூறி, இயேசுவின் வார்த்தைபடியே வலையை வீசினார். மிகுதியான மீன்கள் வலையில் விழுந்தன. வலை கிழியத் தொடங்கியது. இயேசு பேதுருவிடம் இனிமேல் மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன் என்றார்.
இயேசு விரித்த வலையில் விழுந்த முதல் மீன்
பேதுரு தான்.
இரண்டாவது காட்சி (யோவான்.21:4-11)
திபேரிய கடலருகே விடியற்காலம் இயேசு கரையில் நின்று பேதுருவிடம் படகுக்கு வலப்புறமாக வலையை வீசுங்கள் என்றார். பேதுரு வலையை வீச, திரளான மீன்கள் அகப்பட்டது. கரைக்கு இழுத்து வந்தார்கள். பெரியமீன்கள் ஏராளமாக இருந்தும் வலை கிழியவில்லை.
வலையில் விழுந்த மீன்கள்
இரண்டு நிகழ்ச்சிகளிலும் இயேசு, பேதுரு, கடற்கரை, வலை, மீன் எல்லாமே பொதுவாகத் தெரிகின்றது. இரு நிகழ்விலும் மீன் கிடைக்கவில்லை. இயேசு வலை போட வேண்டிய இடத்தைக் கூறவும், வலையில் ஏராளமான மீன்கள் கிடைப்பது. லூக்காவிலும், யோவானிலும் ஒன்றுபடவே காண்கின்றது.
லூக்கா - ஏராளமான மீன்கள் இருந்ததால் அங்கே வலை கிழியத் தொடங்கியது. யோவான் - மிகுதியாக மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
இங்கே வலை கிழிந்ததும், கிழியாமல் இருந்ததும் என்ன புதுவிதமான செய்தியைச் சொல்லுகின்றது? அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகத் தெரியவில்லை. ஏராளமான மீன்கள் வந்து வலையில் விழுந்தது என்று கூறினால் நிகழ்ச்சிகள் நிறைவடைந்துவிடும். வலையைப் பற்றிச் சொல்வதன் பின்னணி என்ன? முன்னதாக வலை கிழிவதும் பின் வலை கிழியாததும் ஆழ்ந்த உட்பொருளைச் சொல்லுகின்றது. அதைத் தெளிவாகக் காண்போம்.
கதைக் களமாக இருக்கும் கடல்நீரும், வலையில் விழுந்த மீனும், இயேசுவும் பேதுருவும், அவர்களிடையே பூக்கும் அன்பும், நட்பும், அவர்களின் குருச் சீடர் உறுதியும் அழகா காட்டுகின்றது.
வலையும் பேதுருவும்
வலை பேதுருவின் மனவுறுதியின், நம்பிக்கையின் உருவமாக இருக்கின்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேதுரு மிகவும் சாதாரணமான சூழ்நிலைகளில் கூட எப்போதும் தோல்வியுறுவதை, இயேசுவை பின் தொடர்ந்தபொழுது பலதடவை உணர்ச்சி மேலிட்டு, பயத்தில், திகைப்பில், வியப்பில் ஆழ்வதைக் காணலாம்.
பேதுருவின் மனவுறுதியில்லாத நிலை.
இயேசு கடலில் நடந்தது போல் பேதுருவும் படகை விட்டிறங்கி நடக்க, காற்றின் வேகத்தைக் கண்டு, ஆண்டவரே காப்பாற்றும் என்று அஞ்சினார். இயேசு “நம்பிக்கை குன்றியவனே” என்று கூறுவார். (மத் 14:31) இயேசு உருமாற்றமாகி மலைமீது தரிசனம் தந்தபொழுது, சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள் (மத் 17:6-7). இயேசு பாடுகளைப் பற்றிக் கூறும்பொழுது பேதுரு இது வேண்டாம். உமக்கு நடக்கவே கூடாது என்று கூறியபொழுது, இயேசு பேதுரு பார்த்து “எனக்கு முன்னே நில்லாதே சாத்தானே!” என்று கடிந்து கொண்டார் (மத் 16:23) கெத்சமேனி தோட்டத்தில் இயேசு மூன்று முறை கூறியும் பேதுருவால் விழித்திருக்க முடியவில்லை (மத் 26:43) பேதுரு இயேசுவிடம் எல்லோரும் ஓடிப் போய்விட்டாலும், நான் ஒரு போதும் ஓடிப்போகமாட்டேன் என்றார். இயேசுவோ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்றார். பேதுரு மறுதலிக்க மாட்டேன் என்றார். முடிவில் இயேசு என்ற மனிதனை அறியேன் என்று சொல்லிச் சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினார் (மத் 26:74)
இயேசு பேதுருவை கல் என்றார். இந்தக் கல்லே இயேசு இடறி விழுந்த இடமும் இந்தக் கல்லே தான். மேற்கண்ட பேதுரு இயேசுவின் மீது உறுதியற்றவராய், நம்பிக்கையில்லாதவராய், அஞ்சியவராய் இருப்பதைத் தான் வலை கிழியத் தொடங்கியது என்ற உருவமாக லூக்கா கூறுகின்றார். பேதுருவின் உறுதியான நிலை இப்பொழுது இறுதிக் காட்சியைப் பார்க்கலாம். பேதுரு வலையில் ஏராளமான பெரிய மீன்கள் வந்து விழுகின்றன. இப்பொழுது யோவான் கூறுவார் வலை கிழியவில்லை. அதாவது உறுதியாக வலையாக உள்ளது. அதைப் போல் பேதுரு உள்ளமும் மனமும் உறுதியாக இருக்கின்றது. எப்படி என்று காண்போம்.
பேதுருவின் மனவுறுதிக்குக் காரணம் பாடுகளின் பொழுது பேதுரு மறுதலிக்கையில் இயேசுவின் பார்வை. அந்தப் பார்வை பேதுரு உறுதியாக்குகின்றது.
பேதுருவின் உறுதியைப் பார்ப்போம். பெத்தகோஸ்து நாளில் பேதுரு உரத்த சத்தமாய் உரை நிகழ்த்தினார். திருமுழுக்குக் கொடுக்கின்றார். சப்பாணியைக் குணமாகினார். பேதுருவின் நிழல் நம்மேல் விழாதா? என்று நோயுற்றோர் வேண்டினார்கள்.
நோய்வாய்ப்பட்ட அன்னியா என்றவரை குணப்படுத்தினார். இயேசு லாசரை உயர்த்தது போல் பேதுரு இறந்த தபித்தா என்ற பெண்மணியை உயிருடன் எழுப்பினார்.
பேதுருவின் உறுதியைத் தன் திருமுகத்தில் வெகு அழகை எழுதுகின்றார் (1பேதுரு 1:5)
நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும் நற்பண்போடு அறிவும் அறிவோடு தன்னடக்கமும் தன்னடக்கத்தோடு மனவுறுதியும் மனவுறுதியும் இறைப்பற்றும் இறைப்பற்றோடு சகோதர நேயமும் சகோதர நேயத்தோடு, அன்பும் கொண்டு விளங்குமாறு நம்மை முயற்சி செய்ய அழைக்கின்றார். இங்கே தான் வலைகிழியாத, உறுதியான பேதுருவைப் பார்க்கின்றோம்.
இயேசு பேதுருவை கல் என்றார். அதன் உறுதியைத்தான் அவரின் வார்த்தைகளில் கேட்கின்றோம்.
லூக்கா முதல் காட்சியில் மீனைத் தேடும் வலையைக் காட்டுகின்றார்.
யோவான் இறுதி காட்சியில் வலையைத் தேடும் மீனைக் காட்டுகின்றார்.
வலை விரிக்கப்பட்டுள்ளது.
வந்து விழுவோமா?


